Sivathanu Family: Poem from sons to Parents

December 2017

அறத்தின் ஆரம்

சத்தியத்தின் முக்கியத்தை

சமத்துவத்தின் தத்துவத்தை

தியாகத்தின் உத்தமத்தை

அகத்தழகின் மகத்துவத்தை

அகங்காரத்தின் பயங்கரத்தை

சுயநலத்தின் பயனிலத்தை

அச்சத்தின் துச்சத்தை

கோபத்தின் ஆபத்தை

பாசத்தின் ஆசுவாசத்தை

ஞானத்தின் ஆழத்தை  

தானத்தின் ஞானத்தை

ஞாலத்தின் நியாயத்தை

மனிதத்தின் புனிதத்தை

நல்லிணக்கத்தின் இலக்கணத்தை

சேவையின் தேவையை

செயலின்மையின் தீமையை

பொறுமையின் பெருமையை

கருணையின் அருமையை

எளிமையின் இறைமையை

இறைமையின் தலைமையை

முயற்சியின் உயர்வை

துணிவின் உணர்வை

பணிவின் பயனை

குணத்தின் மாண்பை

பண்பின் முதன்மையை

அன்பின் பெருந்தன்மையை

நியாயத்தின் தன்மையை

நேர்மையின் தூய்மையை

பிறர்க்குதவும் மார்க்கத்தை

உதறி - செல்வத்தின் தேக்கத்தை

நாடுவோரின் நித ஏக்கத்தை

அவர் இழக்கும் தூக்கத்தை

வெற்றியின் ஏற்றத்தை

தோல்வியின் ஏமாற்றத்தை

வாழ்வின் இம்மாற்றத்தை

சமநோக்கும் நிதானத்தை

உதவியோரின் செய்நன்றியை

உதறுவோரின் அகந்தையை

உறையவைக்கும்  இறைமையை

உணருவோரின் மேன்மையை

உடைமையை விடாமையை

கடைபிடிக்கும்  அடிமையை

தொடருகின்ற  மடமையை

உடைக்கும் கடமையை

கொடுத்த சொல் வாக்கை

காக்க உயரும் செல்வாக்கை

அமைதியான வாழ்க்கையை  

தரும் இறை நம்பிக்கையை

செயலாற்றும் தருணத்தை

தேவையின் தரத்தை  

நியாயத்தின் துலாபாரத்தை

ஆராயும் சூத்திரத்தை

தெய்வீக  புண்ணியத்தை

எய்துகின்ற எண்ணத்தை  

ஈடேற்றும் ஆலயத்தை

விட உயரியதான தூயமனத்தை

சமுதாயத்தின் முன்னேற்றத்தை

சரிக்கும் தீயோரின் ஏற்றத்தை

செரிக்கும்  நல்லோரின் மௌனத்தை

உருவாக்கும் நியாயமற்ற அச்சத்தை

நியாயமற்ற விருப்பத்தை

நினைக்கும் மாத்திரத்தை  

இருக்கும் கோடி இன்பத்தை

பார்க்க மறக்கும் நேத்திரத்தை

எளியோர்முன் ஈரத்தை

தீயோர்முன் வீரத்தை

ஈயோர்முன் புகழாரத்தை

வியாபிக்கும் மந்திரத்தை

இவை யாவையும்  

செயலாலும் சொல்லாலும்

இயல்பாக இதமாக  

அயராது கற்பிக்கும் ....

அருளின் பொருளதை

பொருளின் வழியதை

அறத்தின் அரணதை

நற்கருத்தின் வரமதை

கடமையின் கண்டிப்பை

மடமையின் மன்னிப்பை

உபதேசத்தின் உன்னிப்பை

அன்பின் அரவணைப்பை

ஊக்கத்தின் ஊட்டத்தை

ஆக்கத்தின் இயக்கத்தை

புத்தியின் சுத்தியை

ஆசியின் சக்தியை  

மாசற்ற பாசத்தால்

ஆசையற்ற தியாகத்தால்

களைப்பிலா உழைப்பால்

களிப்புடன் அளிக்கும் ...

 

விந்தை ஊற்றாம்

தந்தை தாய் பாதம் பற்றி

சிந்தையால் போற்றி

தந்தோம் கோடி நன்றி

அவர்கள் உச்ச மகிழ்வோடு

பூரண நலத்தோடு

ஏராள புகழோடு  

நூறாண்டு வாழ

கரம் சேர்த்து

சிரம் தாழ்த்தி

பரம் பொருளை

வரம் வேண்டி வடித்த

ஆரமான அறத்தின் சாரம்.